Monday, March 8, 2021

யாருக்குப் பூமி சொந்தம் பாருக்காய் மோதி

 யாருக்குப் பூமி சொந்தம்

பாருக்காய் மோதி

பகை கொண்டு

வெகுண்டெழும்

பண்பற்ற மனிதற்கா?

 

நீருக்கும்

நிலத்திற்கும்

உரமாகி வாழ்கின்ற

நீர் வாழ் உயிரினமும்

கானகத்தில் வாழும்

கல்லாத விலங்குகளும்

வேடிக்கை பார்த்து

சிரிப்பதை அறிவீரோ!!

 

பூமிக்கு மேலே

புகை கக்கி

விட்டதுவும்,

நீருக்குள் கழிவுகளை

நிரப்பி விட்டு.....

காற்றுப் பொதியும்,

கடலையும், மிட்டாயும்

தண்ணீர் குடுவையும்

ஒன்றாக விற்றுப்

போகும் ஒரு மனிதன்

கூவுகிறான்

 

வாருங்கள்,

வாருங்கள்

போனால்

கிடையாது,

பொழுது பட்டால்

கிடையாது

 

ஆம்

இப்படியே

போனால் கிடையாது,

இனிப்பொழுது

பட்டால் விடியாது.

 

புரொயிலர் கோழிகள்

கூவுவதால்

காலை வரும்

என்றெண்ணி உறங்கும்

மானிடரே விழித்தெழுங்கள்!!

 

ஊர் கோழி முட்டை இட

உரம்போட வேண்டுமா?

நீருக்குள்ளே மீன் வாழ

காசு தான் வேண்டுமா?

 

ஏன் இந்த கேவலங்கள்?

எல்லாம் பேராசைக்

கோலங்கள்!!

 

வான் வாழ மழை வாழும்,

மழை வாழ மரம் வாழும்,

மரம் வாழ காற்று மாசு

கலையும்.

 

கடல்வாழ மீன் வாழும்

மீன் வாழ நீ வாழ்வாய்

நீர் வாழ் உயிரிகளும்

காடு வாழ்விலங்குகளும்

வேறல்ல!!

 அவையும் உன் உறவினரே.

 

நீ வாழ, அவை வாழ

அவை வாழ, நீ வாழ

வாழ், வாழவிடு்.

 

இப்படிக்கு   உயிரினங்கள்


Created by   Mathura  Arunthavam

                       Jaffna

No comments:

Post a Comment